தூக்கணாங்குருவிக் கூடு
உன் அடர் கூந்தலில்
நான் முகம் புதைத்திட்ட போழுதினை
நினைவூட்டுகிறது
நீரோடை உனைப் போலவே இனிதாய்
ஜல்ஜல்லென
சிரித்தோடும் வேளையில்
காற்றில் சிறு பூச்செடிகள்
உன் விரல்கள் போலவே
நடனம் பழகின
பெரும் மரத்தின் மீது
சுற்றிப்படரும் கொடியோன்று
நீயெனை கட்டித் தழுவிய கதை கேட்கிறது
பாதையோர
தொட்டாற் சிணுங்கி
நான் மயக்கம் கொண்டுனை
அள்ளி அணைக்கயில்
நீ துள்ளித் திமிறி
வெட்கம் கொண்டதைச்
சொல்லி நாணியது
உன் சின்னப் பாதங்களை
நதியினில் நனைத்ததில்
நீ கால் வைத்த இடமெல்லாம்
நதி உனைத் தொடர்ந்து
பாதை மறந்தது
மணம் தரும் மலர்கள்
உனை நுகர்ந்து
பொறாமை கொண்டதால்
ஒரு நாளைக்குள்
வாடிச்சுருங்கின
செடிகளை கொடிகளை
நீ வருடிய இடங்களில்
நோடியினில் அழகாய்
புது பூக்கள் பூத்தன
பச்சை வண்ண
ஆடை பூண்டு
நெஞ்சமெல்லாம்
நிறைந்திருப்பது
கானகமா
இல்லை என் கண்மணியா?



