Friday, 13 December 2019

தினமொரு முறை காதல் சொல்

காதலுற்றதால் வரும்
துயரை விட
அதைச் சொல்லில்
வடிப்பதே பெரும்
வேதனையூட்டுதடி

அத்தனை வலி தாங்கியும்
அனுதினமும்
காரணம் பல்லாயிரம்
சொல்வேன்
கண்மணி மேல்
காதல் வர

அதில் ஒன்றேனும்
ஓர் முறை சொல்டி
என்னிடத்தில் நீ
காதல் கொள்ள

நிற்பதற்கும் நேரமின்றி
நிரம்பி நிற்கும்
உன் நாட்குறிப்பில்
எனக்கென
சில மணித்துளி
தரமாட்டாயா

திருமகள் திருமுகம்
எளியவன்
திசை பாராதா

கண்ணில் தெரியும்
உன் காதல்
சொல்லில் வாராதா

பாலைப் பெருநிலம் கடக்கும்
வறியவன் நான்
கானல் காட்சியென
உன் காதல் தெரியுதடி

குவளையில் நீர் உண்டென
அறிந்தென்ன பயன்
அடித் தொண்டை
நனையும் வரை

தணல் வெப்பத்தில் காய்ந்தும்
கண்ணீரில்  தோய்ந்தும்
நிதம் மனம் நோகுதடி

உன் செவ்வாய்
மலர்ந்து‌ ஒவ்வோர்
நாளும் காதல் சொல்லடி
உலரும் என் உயிர்
சிறு துளிர் விடும்.

Wednesday, 4 December 2019

முத்தங்கள் குறித்து

நெற்றியில் தொடங்கி
மோவாயில் முடிக்கிறேன்

இமைகளும் கன்னங்களும்
உனக்கு இரண்டென
முத்தக் கணக்கிட்டே
அறிகிறேன்

உனைக் காணாத
பொழுதுகளின்
கடன் மிச்சம்
முத்தங்களால்
கட்டித் தீர்க்கிறேன்

பரிகாசம் செய்யும்
உன் இதழ்களை
முத்தச் சிறையிலடைக்கிறேன்

முத்தங்கள் முடிந்த பின்
ஓராயிரம் கேள்விகள் கேட்கிறாய்

விடை எதுவென
விழி பிதுங்கி நிற்கையில்
எல்லா கேள்விகளுக்கும் முத்தங்களே பதில் என்கிறாய்

தவறான விடைகளுக்கு
தண்டனை இரட்டிப்பு
முத்தங்கள் என்கிறாய்

வாய் வலிக்க
பதில் சொல்லி
தலைசுற்றி நிற்கிறேன்

நான் விட்ட இடத்திலிருந்து
நீ மீண்டும்
துவங்குகிறாய்

அன்பின் அளவுகோல்
முத்தமே என்றால்
நம் காதல்
அலைகடலினும் பெரிதென
சிவக்கிறாய்.