Tuesday, 19 November 2019

தமிழிலே காதல் சொல் கண்ணா

எழுத்துக் கூட்டிப் படிக்கிறாய்
பேசிப் பழகும்
குழந்தை போல்
கொஞ்சிப் பேசி
வார்த்தை சரிதானே
என சிரிக்கிறாய்

ஓதுவார் பாட்டினிலோ
பாவலர் கற்பனையினிலோ
எவருக்கும் எட்டாத
புது வார்த்தைகள்
நிதம் புனைகிறாய்

தோழன் எனை
தீந்தமிழில்
கவி எழுது
வேறு மொழி வேண்டாம்
தாயிருக்க செவிலி
எதற்கு நண்பா
எனக் கடிந்துரைத்தான்

உயிர் ஊற்றி
கவி வளர்த்தென்ன
பயன் நண்பா
என்‌ கண்மணிக்கு புரியாதெனில்
எனத் தேற்றினேன்

உன்னிடத்தில்
இதைச் சொல்லி
நகைத்தேன்

என் கண்ணா
வார்த்தைகள்
புரிகிறதோ அன்றோ
கண்மணிக்கு
உன் காதல்
புரியும் என்றாய்

தமிழ் பிழைத்ததோ அன்றோ
நிச்சயம் காதல் பிழைத்தது.

Monday, 11 November 2019

காணாத நாட்கள்


நீ அருகிலாத
பொழுதுகளில்
இந்த அறை
முழுதும் உன் வாசமே
நிரம்பித் திளைக்கிறது

சிறு கொலுசின்
மணி போல
நீ சிரிக்கும்
மென் ஒலியே
காற்றில் அலைகிறது

நீர்ப் பறவையின்
அலகில் சிக்குண்ட மீனாய்
மனம் துள்ளித் துடிக்கிறது

காணாத நாட்களையே
காலத்தின் சுவட்டிலிருந்து
அழித்துவிட முடியாதா

ஓர் நொடி
கண்மூடி விழித்தால்
மந்திரம் செய்தது போல்
உன் முன் வரவே
முடியாதா

இந்த கொடுந்துயர்
தாளாது
கவி எழுதித்
தீராது

விடைபெறும் தருணத்தில்
உன் கைப்பையில்
எனை திணித்துக் கொள்

போகுமிடமெலாம்
எனை தூக்கிச் செல்
கண்மணி.